சுடச்சுட ’ஷவர்மா’ சாப்பிட ரெடியா...? அராப் நாட்டு உணவு இனி சென்னையில்...

’Zwarma’ எனும் பிரத்யேக உணவு பிராண்ட் பெயரில் ஒரு கடையில் தொடங்கி, இன்று சென்னையில் மட்டும் 5 கடைகளை திறந்துள்ளனர் தொழில்முனைவர்கள் தினேஷ் மற்றும் சரவணன்!
2 claps 117+ shares
0
0

ஸ்டார்ட் அப் என்ற சொல் தற்பொழுது பரவலாக பேசப்பட்டாலும் சிலர் தொழில் தொடங்கி அதில் வெற்றிபெற்றாலும் பலருக்கு அது எட்டா தூரத்திலேயே இருக்கிறது. பரம்பரையில் முதல் பட்டதாரியாக வெளிவந்து எட்டாத ஸ்டார்ட் அப் பயணத்தை தொடங்கி எட்டிப்பிடித்து இன்று ஒரு உணவு பிராண்டை உருவாக்கியுள்ளார் தினேஷ் ரத்தினம். 

இப்பொழுது இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ’ஷவர்மா’வை தனது தொழிலின் முக்கிய அம்சமாக எடுத்துக்கொண்டு ’ஷவர்மா’ (Zwarma) என்னும் அதற்கான பிரத்தியேக உணவுக் கடையை உருவாக்கி வளர்ந்துள்ளார் தினேஷ்.

நிறுவனர்கள் தினேஷ் மற்றும் சரவணன் 

“லஸ்ஸி , குல்ஃபி ஆகியவற்றிற்கு தனி பிராண்டுகள் மற்றும் கடைகள் உள்ளன. ஆனால் ஷவர்மாவுக்கு என அதுபோன்று எதுவும் இல்லை. மக்கள் இடத்தில் பிரபலமாக இருக்கும் இந்த உணவுக்கு ஏன் தனிப்பட்ட கடை மற்றும் பிராண்டு உருவாக்கக் கூடாது என்ற சிந்தனையில் தொடங்கியதே இது,” என்கிறார் தினேஷ். 

வேலூரைச் சேர்ந்த இவர் ஒரு எம்பிஏ பட்டதாரி; தான் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தப் போது முன்னாள் குடியரசுத்தலைவர் ஐயா அப்துல் கலாமின் பேச்சால் ஈர்க்கப்பட்டு தொழில்முனைவர் ஆக வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். 2003ல் தனது படிப்பு முடிந்தாலும் குடும்பச் சூழலால் தனது தொழில்முனைவுக் கனவை அவரால் துவங்க முடியவில்லை அதனால் படிப்புக்கு ஏற்ற வேலை என சம்பளத்திற்கு பணிக்கு அமர்ந்துவிட்டார் தினேஷ். 10 வருடம் பல பணிகள் மாறி வேலை செய்தாலும் தன் கனவை மறக்கவில்லை.

“எனது லட்சியம் சுயமாக நிறுவனம் அமைக்க வேண்டும் என்பது தான், வேலை பாரத்தாலும் லட்சியத்தை நான் மறக்கவில்லை. 2014ல் துணி அல்லது உணவு சமந்தப்பட்ட நிறுவனம் அமைக்க வேண்டும் என முடிவு செய்தேன்.”

சரியான நேரம் அமைந்ததும் ஆடை நிறுவனம் ஒன்று அமைக்க முடிவு செய்துள்ளார் தினேஷ், ஈபி என்னும் பிராண்டில் ஆண்களுக்கான லினன் சட்டைகளை தயாரிக்க முடிவு செய்தார். பணியில் இருந்துக்கொண்டே சட்டைகளைத் தயாரித்து வார இறுதிகளில் துணிக்கடையில் விநியோகம் செய்துள்ளார். ஆனால் ஒரு வருடத்திற்குள் அதை நிறுத்த வேண்டிய நிலை. கடல் போன்று உள்ள ஆடை வணிகத்தில் பிராண்டாக முன்னேறுவது கடினம் என்பதை உணர்ந்துள்ளார் தினேஷ். 

1000 சட்டைகளை தயாரித்து அதில் 750 சட்டைகளை வரை விற்றுள்ளார், அதற்கு மேல் தினேஷால் அதை தொடர முடியவில்லை. இருந்தாலும் தனது கனவை விட்டுக்கொடுக்காமல் அடுத்து உணவுத் துறையில் தன் திறமையை முயற்சி செய்துப் பார்க்க முடிவு செய்தார். 

“உணவுத் துறையில் தொழில் அமைக்க வேண்டும் என முடிவு செய்தவுடன் எனது உறவினர் சரவணன் உடன் சேர்ந்து ஓர் உணவகத்தை துவங்க முடிவு செய்தேன்.”

தனது சொந்த சேமிப்பு மற்றும் வங்கிக் கடன் பெற்று ’கிரில் ஃபாக்ட்டரி’ என்னும் உணவகத்தை சென்னை கொளத்தூரில் 2016 இறுதியில் துவங்கியுள்ளனர். உணவகம் துவக்கத்தில் இருந்தே நல்ல நிலைமையில் ஓட ஆண்டுக்கு 60 லட்சம் வரை வருவாய் ஈட்டினர். இருப்பினும் அது ஒரு நிறுவனமாகவோ அல்லது ஒரு பிராண்டாக அமையவில்லை என்ற நெருடல் தினேஷிற்கு இருந்துள்ளது. அதனால் இதைத் தாண்டி பிராண்ட் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற ஆராய்ச்சியில் இறங்கினார் தினேஷ். 

“பிரபலமான மெனு அல்லது உணவு ஒன்றை எடுத்துக்கொண்டு அதற்குத் தனி பிராண்டை உருவாக்க முடிவு செய்து ஷவர்மாவை தேர்ந்தெடுத்தேன். பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 2017 இறுதியில் ஷவ்ரமாவிர்காக பிரத்தியேகமாக ’சவர்மா’ 'Zwarma' என்ற பிராண்ட் பெயரிட்டு, 1.5 லட்ச ரூபாய் முதலீட்டில் சிறிய கடை ஒன்றை துவங்கினேன்.” 

ஏற்கனவே தொழிலில் சறுக்கல்களை பார்த்ததால் ஆரம்பத்தில் லாப நோக்கத்துடன் இக்கடையை நிறுவாமல் தனது பிராண்டை மக்களுக்கு பரிட்சியமாக்கவும் புதிய ரெசிபீக்களை உருவாக்கவும் அக்கடையை துவங்கியுளர்.

அதனைத் தொடர்ந்து பல ஆரய்சிக்களுக்குப் பிறகு 15 வகைச் சுவையில் ஷவர்மாவை அறிமுகம் செய்தார். பிரயாணி சுவை, பெரி பெரி சாஸ் போன்ற பல சுவைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். தான் துவங்கிய முதல் கடை சற்று நல்ல வரவேற்பைப் பெற, தனது பிராண்டை வளர்க்க ஃபிரான்சைஸ் கொடுக்க முடிவு செய்துள்ளார். 

தற்பொழுது சென்னையில் 5 கடைகளை திறந்துள்ளார் தினேஷ். கூடிய விரைவில் பாண்டி, கடலூர் மற்றும் மதுரையில் தனது பிராண்ட் வளர தயாராகவுள்ளது என்கிறார். 2019க்குள் தமிழ்நாடு பெங்களூர் மற்றும் கேரளாவில் 50 கடையை திறப்பதே தனது முக்கிய லட்சியமாக கொண்டுள்ளதாக முடிக்கிறார் தினேஷ்.